• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பஞ்சாலைகளை இயக்க மத்திய அரசை வலியுறுத்த கோரிக்கை

June 26, 2021 தண்டோரா குழு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்கம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கொரோனா தொற்றின் முதல் தாக்குதலால் நாடு முழுவதும் கடந்தாண்டு மார்ச் 24-ம் தேதி தொடங்கி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தேசிய பஞ்சாலை கழகத்துக்கு சொந்தமான பஞ்சாலைகளின் இயக்கம் நிறுத்தப்பட்டது. கடந்தாண்டு மே மாதம் 18-ம் தேதி முதல் ஆலைகளை இயக்க தளர்வுகள் அளிக்கப்பட்ட பிறகும் ஆலைகள் இயக்கப்படவில்லை.

அப்போது வரை தொழிலாளர்களுக்கு பேரிடர் முன்னிட்டு ஒன்றரை மாதம் முழு ஊதியம் வழங்கப்பட்டது. அதற்கு பிறகு பாதி ஊதியம் அதுவும் காலம் கடந்து அளித்து வருகின்றனர்.

இதனால் தொழிலாளர்கள் அனைவரும் வீட்டு கடனுக்கான மாதாந்திர தவணை, குழந்தைகளின் படிப்பு,திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கான செலவுகளை செய்ய முடியாமல் கடந்த ஒன்றரை ஆண்டாக தடுமாறி வருகின்றனர். தவணைகளை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த முடியாமல் அபராத விதிப்புக்கு உள்ளாகும் நிலையும் உள்ளது.

தொழிற்சங்கங்கள் சார்பில் பெருமுயற்சிகளும் போராட்டங்களும் செய்த பிறகு சொற்பமான ஆலைகள் மட்டும் 50 சதவீதம் இயக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள 7 ஆலைகளில் 3 மட்டும் அரைகுறையாக ஒரு சில மாதங்கள் இயக்கப்பட்டன. தற்போது கொரோனா 2-வது அலை ஏற்பட்டதால் கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் இயக்கப்பட்ட சில ஆலைகளும் நிறுத்தப்பட்டு விட்டன.

ஊரடங்கு உத்தரவால் ஆலைகள் நிறுத்தப்படுவதில் தவறில்லை. ஆனால் தொழிற்சாலைகளை இயக்கலாம் என அறிவிப்பு கொடுத்த பிறகும், எவ்வித சரியான காரணமும் தெளிவுபடுத்தாமல் சட்டவிரோதமாக ஆலைகளை தொடர்ந்து நிறுத்தி வைப்பது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுதொடர்பாக மத்திய ஜவுளித் துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் சந்தித்து மக்களவை உறுப்பினர்கள் மூலமாக ஆலைகளை இயக்க வலியுறுத்தப்பட்டது. அப்போது கடந்த மார்ச் 31-ம் தேதிக்குள் அனைத்து ஆலைகளும் படிப்படியாக இயக்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால் அவர்கள் அளித்த வாக்குறுதிப்படி ஆலைகள் இயக்கப்படவில்லை. தமிழக முதல்வர் இவ்விவகாரத்தில் கவனம் செலுத்தி தமிழகத்தில் உள்ள தேசிய பஞ்சாலை கழகத்துக்குரிய பஞ்சாலைகளை இயக்க மத்திய அரசை வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க