April 10, 2021
தண்டோரா குழு
நேரு கல்வி குழுமங்கள் மற்றும் கோயம்புத்தூர் வெஸ்டர்ன் வேலி சைக்ளிங் இணைந்து சாதனையாளர்கள் விருது 2021 பெற்றவர்களுக்கான பாராட்டு விழாவை நடத்தியது.
தேசிய டிராக் மற்றும் எம்டிபி சைக்ளிங் பதக்கங்களை வென்ற வீரர்களின் சாதனைகளை அங்கீகரித்து அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, பராட்டு விழா நடத்தியது. குனியமுத்தூரில் உள்ள நேரு கல்லூரி வளாகத்தில் நடந்த பாராட்டு விழாவில், தேசிய டிராக் மற்றும் எம்டிபி சைக்ளிங் பதக்கங்களை வென்ற வீரர்கள் பங்கேற்றனர்.
விழாவிற்கு, நேரு கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரி மற்றும் செயலாளர் டாக்டர் பி. கிருஷ்ணக்குமார் தலைமை வகித்தார். கோயம்புத்தூர் சைக்கோளஜி நிறுவனர் சக்ரவர்த்தி பிரூர் தலைமை விருந்தினராக பங்கேற்று வெற்றியாளர்களை பாராட்டினார். கோவை ஜாக்புரோ நிறுவனர் குமரன் ஆலாலசுந்தரம், கோவை மாவட்ட ஹாக்கி சங்கத்தின் செயலாளர் மற்றும் தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் பொருளாளர் டாக்டர் பி. செந்தில் ராஜ்குமார், கோவை மாவட்ட சைக்ளிங் சங்கத்தின் செயலாளர் ஜே.கிருஷ்ணமூர்த்தி மற்றும் பொருளாளர் எம். விக்னேஸ்குமார், எஸ்எஸ்ஐ பள்ளி சைக்ளிங் கோச் டி. பாலமுரளி ஆகியோர் பங்கேற்றனர். வெஸ்டர்ன் வேலி சைக்ளிங் கிளப் தலைவர் ரோபார்ட் ஆன்டனி நன்றி கூறினார்.
விழாவில் பங்கேற்று பாராட்டி பேசியவர்கள், சைக்கிள் போட்டிகளில் பங்கேற்பது ஆரோக்கியமானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்களும் பெண்களும் எளிதாக மகிழ்வோடு மேற்கொள்ளும் எளிய வகை உடல் பயிற்சி. வாழ்க்கை சைக்கிள் ஓட்டுவதை போன்று சமநிலைபடுத்திக் கொண்டால் எளிமையாக ஓட முடியும். நம்மை எப்போதும் சுறுசுறுப்புடன் மனதளவிலும், உடலளவிலும் இயங்க வைக்கும். நல்ல ஆரோக்கியத்தை தருவதுடன் சுவாச பயிற்சியையும் தரும். சைக்கிள் ஓட்டுவோர் நல்ல விளையாட்டு பந்தயங்களில் பங்கேற்க உதவியாக இருக்கும். சைக்கிள் ஓட்டுவதில் நிபுணத்துவம் பெற்றவர்கள், ஒரு பெடலில் ஓட்டுவதோடு, போட்டிகளில் வெல்லும் மனப்பக்குவத்தையும் தைரியத்தையும் பெறுகின்றனர், என்றனர்.
விழாவில், சாதனையாளர்கள் விருது 2021 மற்றும் சான்றிதழ்கள், இரண்டு இளம் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது. கர்நாடகாவில் தேசிய டிராக் சைக்களிங் சாம்பியன்ஷிப் 2021 போட்டி 35வது சப்ஜூனியர் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற பூஜா ஸ்வேதா, வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்ற தன்யதா ஜே.பி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இதே போட்டியில் பங்கேற்ற 14 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கர்நாடக மாநிலம் கடாக்கில் நடந்த 17 வது தேசிய மலையேற்ற சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற வென்ற ஒன்பது பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.