• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நெல் ஜெயராமன் நினைவு நாளை முன்னிட்டு காவேரி கூக்குரல் சார்பில் ’மரம் நட விரும்பு’ நிகழ்ச்சி

December 6, 2020 தண்டோரா குழு

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் பணியில் தன் வாழ்நாளை அர்ப்பணித்த நெல் ஜெயராமனின் நினைவு நாளை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் ‘மரம் நட விரும்பு’ நிகழ்ச்சி இன்று (டிசம்பர் 6) சிறப்பாக நடைபெற்றது.

மொடக்குறிச்சி வட்டம், குளூர் அருகே உள்ள சிவலிங்கபுரத்தில் விவசாயி கே.எஸ்.ராஜேஸ்வரனுக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தில் சுமார் 3,500 மரங்களை நடும் விதமாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் தலைவர் நல்லசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் தன்னார்வ தொண்டு அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

குறிப்பாக, சுற்றுச்சூழல் மேம்பாட்டுடன் சேர்த்து விவசாயியின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக தேக்கு, கருமருது, செம்மரம், சந்தனம், ரோஸ்வுட் போன்ற விலைமதிப்புமிக்க டிம்பர் மரங்கள் நடப்பட்டன. காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.

இந்நிகழ்ச்சி தொடர்பாக அவர் கூறுகையில்,

“நெல் ஜெயராமன் ஐயா அவர்கள் ஈஷாவின் சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று ஆதரவு அளித்துள்ளார். அவர் ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தும் போது மரக்கன்றுகளை நட்டு வைத்து தான் நிகழ்வை தொடங்குவார். மேலும், ஈஷா பசுமை கரங்களுடன் இணைந்து 10,000 டிம்பர் மரக்கன்றுகளை உருவாக்கி விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கினார்.

அத்துடன், சத்குரு நடத்திய ’நதிகளை மீட்போம்; பாரதம் காப்போம்’ என்ற சுற்றுச்சூழல் பேரணியின் போது திருச்சியில் பங்கேற்று ஆதரவு அளித்து பேசினார். விவசாயிகள் நலனுக்காக தொடர்ந்து சேவையாற்றிய அவருக்கு நன்றி கூறும் விதமாக இன்றைய மரக்கன்று நடும் நிகழ்வை நடத்துகிறோம்” என்றார்.

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவால் கடந்தாண்டு தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் இயக்கம் தமிழ்நாடு மற்றும் கர்நாடக விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதன் விளைவாக, இவ்வியக்கத்தின் மூலம் இதுவரை 86 லட்சம் மரக்கன்றுகள் விவசாயிகள் தங்கள் நிலங்களில் நட்டு வளர்த்து வருகின்றனர்.

மேலும் படிக்க