June 18, 2018
தண்டோரா குழு
நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே 19க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து உத்தரவிட்டார்.இதன்படி பிளாஸ்டிக் தட்டுகள், கிண்ணங்கள்,பிளாஸ்டிக் பைகள்,ஒரு தடவை உபயோகிக்கும் டம்ளர்கள் தட்டுக்கள் என பல்வேறு பிளாஸ்டிக் பொருட்கள் இதில் அடங்கும்.பிளாஸ்டிக் தடையை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மீறி அதை விற்பவர்கள் மீதும் பயன்படுத்துபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று கமர்சியல் சாலையில் உள்ள அடையார் ஆனந்தபவன் உணவகத்தில் உதகை நகராட்சி ஆணையர் ரவி தலைமையில் நகராட்சி ஊழியர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கிண்ணங்கள்,மேசை விரிப்புகள் மற்றும் டம்ளர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து அங்கு பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பொருட்கள் சுமார் 24 கிலோ இருந்ததாக தெரியவந்ததை அடுத்து ஒரு கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு ரூபாய் 2000 வீதம் 48 ஆயிரம் ருபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும்,இந்த கட்டிடத்தில் 40 மேசைகள் இருக்கும் அளவுக்கே அனுமதி வாங்கியுள்ள நிலையில் 100 மேசைகளுக்கு மேல் பயன்படுத்துவதை கண்ட நகராட்சி ஆணையர் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்து சென்றார்.
நீலகிரியின் பசுமையை காப்பாற்றவும் இயற்கை வளத்தை பேணி காக்கவும் அனைத்து தரப்பினரும் முயன்று வரும் நிலையில் இதை போன்ற சம்பவம் இயற்கை ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.