August 10, 2018
தண்டோரா குழு
சைதாபேட்டை நீதிமன்றம் விடுவித்த பிறகும் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி மீண்டும் கைதுசெய்யபட்டுள்ளார்.
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நேற்று காலை ஜெர்மனியிலிருந்து பெங்களூரு விமான நிலையத்தில் வந்திறங்கியதும் போலீசார் அவரை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து, தனிப்படை போலீசார் மூலம் திருமுருகன் காந்தி இன்று அதிகாலை சென்னைக்கு அழைத்து வரப்பட்டு பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, இவ்வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி பிரகாஷ்,திருமுருகன் காந்தி மீது பதியப்பட்டுள்ள வழக்கில் அடிப்படை முகாந்திரம் இல்லாத காரணத்தால் அவரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட முடியாது. வேண்டுமானால் 24 மணி நேரத்துக்குள் அவரை விசாரிக்கலாம் என நீதிபதி பிரகாஷ் கூறினார். இதையடுத்து, இன்று மாலை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம்,திருமுருகன் காந்தி தேச விரோதமாக ஒன்றும் பேசவில்லை எனக் கூறி நீதிமன்ற காவலுக்கு அவரை அனுப்ப மறுத்து விடுவித்தது. இதற்கிடையில் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த திருமுருகன் காந்தியை மீண்டும் போலீசார் கைது செய்தனர்.
அப்போது வாரண்ட் இல்லாமல் கைது செய்வது சட்டவிரோதமானது என்றும், அதனால் கைது நடவடிக்கைக்கு ஒத்துழைக்க முடியாது என்றும் திருமுருகன் காந்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனினும், போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். திருமுருகன் காந்தி 2017-ல் அரசு எதிராக பேசியதாக அவரை போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.