May 5, 2018
தண்டோரா குழு
நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு மாணவர்கள் சென்று தேர்வு எழுத உள்ளனர்.தற்போது தேர்வு எழுத வெளி மாநிலம் செல்லும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பல விதங்களில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும்,பள்ளி கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டு உள்ள நிலையில் விடுமுறையை கொண்டாட தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்கு இரயில் மற்றும் பேருந்துக்களில் முன்பதிவு ஏற்கெனவே செய்து விட்டனர்.
இந்நிலையில் மத்திய அரசு மருத்துவ நுழைவு தேர்வை மாணவர்கள் மாநிலம் விட்டு மாநிலம் சென்று எழுத வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளி உள்ளது.
மாணவர்கள் நீட் தேர்விற்கு தயார் ஆவதற்கு பெரும் சிரமப்பட்டு வரும் வேலையில் அண்டை மாநிலங்கள் சென்று நுழைவு தேர்வு எழுதுவது அவர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
தற்போது அண்டை மாநிலங்கள் சென்று நுழைவு தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் சென்று வருகின்றனர். அவ்வாறு செல்லும் அவர்களுக்கு அந்த ஊர் புதிது என்பதாலும் மொழி புரியாமலும்,எங்கு தங்குவது எங்கு செல்வது என்று ஒன்றும் புரியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அண்டை மாநிலமான கேரளா எர்ணாகுளம் பகுதியில் ஜவுளி கடை வைத்து தொழில் செய்து வரும் திருமலை என்பவர் கூறுகையில்,
“நான் 20 வருடமாக கடை வைத்துள்ளேன்.தற்போது நீட் தேர்வு எழுத வரும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் எங்கு செல்ல வேண்டும் எந்த பேருந்தில் ஏறுவது தங்குவது எப்படி என்று புரியாமல் தவித்து வருகின்றனர். தற்போது வரை 150க்கும் மேற்பட்டவர்கள் வந்து இருப்பார்கள் நான் அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். ஏன்,என்றால் எனது மகளும் திருநெல்வேலியில் நீட் தேர்வு எழுத உள்ளார். அவரும் சிரமப்பட்டு தான் அங்கு சென்றார். அதனால் நான் இங்கு வருபவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்து வறுகிறேன்”.இவ்வாறு அவர் கூறினார்.