May 4, 2018
தண்டோரா குழு
நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு எந்த சிறப்பு ரயிலும் ஒதுக்க முடியாது என மத்திய ரயில்வே துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் வரும் ஞாயிறு 6ம் தேதி நடக்கிறது. தமிழகத்தில் மதுரை,நெல்லை,திருச்சி,கோவை,நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மட்டுமே இந்த தேர்வுக்கான மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நெல்லை,தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்குக் கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் பத்தனம்திட்டா பகுதியிலும் பல்வேறு மாணவ மாணவிகளுக்கு ராஜஸ்தானிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.இதனால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.இதனால் மாணவர்களுக்கு பலரும் உதவி புரிந்து வருகின்றனர்.
இதற்கிடையில் வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் என்றும்,மாணவர்களுக்கு 2-ம் வகுப்பு ரயில் கட்டணத்தையும் அரசே வழங்கும் என்றும்,மாணவ-மாணவிகள் உடன் செல்லும் நபருக்கும் பயணப்படியாக 2-ம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய ரயில்வே துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிறப்பு ரயில் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு இதுவரை எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. 8,500க்கும் மேற்பட்டோர் செல்லும் வகையில் உடனடியாக சிறப்பு ரயில் ஏற்பாடு செய்ய முடியாது.ஐபிஎல் போட்டிக்காக புனே சென்ற ரயில் வடகிழக்கு மாநிலங்களில் இருப்பதால் கூடுதல் ரயில் இல்லை.தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தனியாக சிறப்பு ரயில் ஒதுக்க முடியாது என தெரிவித்துள்ளது.