• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“நீட்” தேர்விலிருந்து மத்திய அரசு விலக்களிக்க வேண்டும்-ஸ்டாலின்

March 2, 2017 தண்டோரா குழு

“மாணவர்கள் நலன் கருதி “நீட்” தேர்விலிருந்து மத்திய அரசு விலக்களிக்க வேண்டும்” என்று சட்டப் பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மாணவர்களின் எதிர்காலம் தமிழக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.

இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

“மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான “நீட்” நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் (மார்ச் 1) முடிந்து விட்டது. மே 7- ம் தேதி “நீட்” தேர்வு நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்வின் அடிப்படையில்தான் மாநில அரசின் கீழ் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் மற்றும் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழங்களிலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று, இந்தத் தேர்வை நடத்தும் மத்திய அரசின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.இ. (CBSE) அறிவித்துள்ளது.

அது மட்டுமல்ல, இந்த தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெறாத மாணவர்களை மருத்துவப் படிப்பில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்றும் அவ்வாறு தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெறும் மாணவன் மூன்று முறை மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார் என்றும் சி.பி.எஸ்.இ. கூறியுள்ளது.
இதனால் கிராமப்புற மாணவர்களுக்கும், நகர்ப்புறத்தில் உள்ள ஏழை, எளிய மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்பே இனி கிடைக்காதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு “நீட்” நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தரமாக விலக்களிக்கும் வகையில் ஜனவரி 31-ம் தேதி சட்டப் பேரவையில் மசோதாவை கொண்டு வந்த போது அதை தி.மு.க. ஆதரித்து, வாக்களித்தது.

தமிழக சட்டப் பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்திற்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலில் பெறுவதில் தமிழக அரசு எவ்வித அவசரமோ, அக்கறையோ காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் பல மாணவர்கள் “நீட்” தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தாலும், பல மாணவர்கள் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை நம்பி “நீட்” தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருக்கிறார்கள்.

மாணவர்களின் எதிர்காலம் தமிழக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியாகி இருக்கிறது. “நீட்” தேர்வு பற்றிய நிலை என்ன என்பது தெரியாமல் தேர்வு நடைபெறும் மே 7 ஆம் தேதியை எதிர்நோக்கி ஒருவிதமான மன அழுத்தத்துடனும், குழப்பத்துடனும் லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கிறார்கள். அதை விட அதிகமான மன அழுத்தத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

இனிமேலும் மாணவர்களின் நலனுடன் விளையாட வேண்டாம் என்று தமிழக அரசை எச்சரிக்கிறேன். அதே வேளையில் மாநில அரசு உடனடியாக மத்திய அரசை அணுகி, “நீட்” தேர்வு எழுதும் மே 7 -ம் தேதிக்கு முன்பாவது “நீட் மசோதாவிற்கு” குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும்.

மத்திய அரசும் தாமதம் செய்யாமல் “நீட்” தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு நிரந்தர விலக்கு அளிப்பதற்கு மாணவர்கள் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் படிக்க