December 22, 2020
தண்டோரா குழு
பாரதியார் பல்கலை கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை தராமல் இனியும் தாமதித்தால் ஆடு, மாடுகளுடன் குடியேறும் போராட்டத்தை ஜனவரி மாதத்தில் நடத்துவோம் என கோவை நாடாளுமன் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் எச்சரித்தார்.
பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நிலத்திற்கான பணம் மற்றும் வேலை இதுவரை வழங்கப்படவில்லை. 30 ஆண்டுகளாக இம்மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராக பி.ஆர்.நடராஜன் இருந்தபோது தொடர் முயற்சியின் காரணமாக ஒரு பகுதி நிதியை விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுத்தார். இதனையடுத்து கடந்த ஐந்தாண்டுகளாக எவ்வித இழப்பீடும் கிடைக்கப்பெறவில்லை. தற்போது கோவை நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற பிறகு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டை பெற்றுத்தர வேண்டும் என்கிற முனைப்போடு பி.ஆர்.நடராஜன் எம்பி செயல்பட்டு வருகிறார்.
இதன்ஒருபகுதியாக பாரதியார் பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்டு செவ்வாயன்று பி.ஆர்.நடராஜன் எம்பி தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய பி.ஆர்.நடராஜன் எம்பி பேசுகையில்,
எம்ஜிஆர் காலத்தில் பல்கலைக்கழகங்கள் நடத்துவதற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு விவசாயிகளிடமிருந்து நிலமானது வாங்கப்பட்டது. அதன்படி கோவையிலும் பாரதியார் பல்கலைக்கழகம் நடத்துவதற்காக ஆயிரம் ஏக்கர் நிலம் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டது. அப்போதைய நேரத்தில் அரசு வழங்குவதாக கூறிய விலை குறைவாக உள்ளது என்றும் அதை அதிகரித்து தர வலியுறுத்தியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதற்கு தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால் அதை விசாரிக்காமல் இன்று வரை காலம் தாழ்த்தி வருவதாகவும் உடனடியாக விவசாயிகளுக்கு சேரவேண்டிய பணத்தை தரவேண்டும் அதுமட்டுமின்றி எம்ஜிஆர் காலத்தில் கூறப்பட்ட, நிலம் அளித்த விவசாயிகளின் வீட்டில் ஒருவருக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தில் தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். இல்லையென்றால் தை மாதம் பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் ஆடு மாடுகளுடன் பாரதியார் பல்கலைக் கழகத்திற்குள் குடியேறும் போராட்டத்தை நடத்துவோம்.
ஏனென்றால் இது விவசாயிகளின் நிலம் அவர்கள் நிலத்தில் அவர்கள் ஆடு மாடுகளை மேய்ப்பார்கள். இதனை யார் தடுத்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். இத்தகைய போராட்டங்கள் நடைபெறக்கூடாது என்றால் நானும் ஒரு விவசாயி என போகிற இடத்தில் எல்லாம் சொல்கிற முதல்வர் விவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்து உடனடியாக நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்றார். இந்த போராட்டத்தில் விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.பி.இளங்கோவன், செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கருப்பையா மற்றும் சு.பழனிச்சாமி, விதொச சங்க தலைவர்கள் ஏ.துரைசாமி, செல்வராஜ், காளப்பன், மகாலிங்கம், ரவிச்சந்திரன், நாகேந்திரன், சு.துரைசாமி, ஆறுச்சாமி, வடவள்ளி மணி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.