April 30, 2018
தண்டோரா குழு
பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ விவகாரம் குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சந்தானம் குழுவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மேலும் 2 வாரம் அவகாசம் அளித்தார்.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் செல்போனில் பேசியதாக பேராசிரியை நிர்மலா தேவி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் மற்றும் ஆளுநரால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரியான சந்தானம் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதில், சி.பி.சி.ஐ.டி. போலீஸார் நடத்திய விசாரணையில் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரின் தூண்டுதலிலேயே மாணவிகளிடம் பேசியதாக நிர்மலாதேவி தெரிவித்திருந்தார். இதையடுத்து, இருவரையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.
அதேபோல் மதுரை பல்கலைக்கழக துணை வேந்தர், அதிகாரிகள் மற்றும் சிறையில் உள்ள நிர்மலா தேவி ஆகியோரிடம் சந்தானம் குழு விசாரணை நடத்தியுள்ளது. இந்நிலையில், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் இன்றுடன் முடிந்த நிலையில், சந்தானம் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 2 வார கால அவகாசம் வழங்கி ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.