February 1, 2020
தண்டோரா குழு
சிகிச்சைக்கு பின்னரும் முழு உடல் தகுதி பெறாத காரணத்தால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹர்திக் பாண்டியா விளையாடமாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின்போது இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.அதன்பின் சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் அணிக்கு திரும்பினர் ஆனாலும், முகுது வலி அவருக்கு தொடர்ந்து இருந்ததால் லண்டன் சென்று அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டார். இதையடுத்து, கடந்த 5 மாதங்களுக்கு மேலாக அவர் எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்காமல் ஓய்வில் இருந்துவந்தார்.
இதற்கிடையில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளதாக இந்திய அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ஹர்திக் பாண்டியா டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், ஹர்திக் பாண்டியா முழு உடல் தகுதியுடன் உள்ளாரா என்பதற்கான பரிசோதனை நடைபெற்றது. அந்த பரிசோதனையில் அவர் தோல்வியடைந்தார். இதையடுத்து நியூசிலாந்திற்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் தொடரிலும் ஹர்திக் பாண்டியா பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது