April 9, 2018
தண்டோரா குழு
சென்னையில் நாளை நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நாளை நடைபெற உள்ள சென்னை- கொல்கத்தா அணிகள் மோதும் ஐ.பி.எல். போட்டி பெரும் பரபரப்பையும், எதிர்பார்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், நாளை நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டி மக்களை திசை திருப்ப நடத்தபடுவதாகவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் எங்கும் ஐ.பி.எல். போட்டி நடத்த கூடாது என்று அனைத்து தரப்பில் இருந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டி நாளை நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், திட்டமிட்டபடி நாளை சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னையில் நாளை நடைபெறும் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான நிர்வாகம் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது.
அதன்படி குடிநீர் பாட்டில், கூலிங்கிளாஸ், கைப்பை, மின்சாதனங்கள், இசைக்கருவிகள், பாதகைகள் எடுத்துச்செல்லக்கூடாது. செல்போன், லேப்டாப், காமிரா கொண்டு செல்ல அனுமதி இல்லை. பேனர்கள், கொடிகள், பட்டாசுகள் கொண்டு செல்லவும் அனுமதி இல்லை. தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் யாரும் எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது. இனவெறியை தூண்டும் வகையில் முழக்கமிட்டால் கைது செய்யப்படுவர். மைத்தானத்தை சேதப்படுத்தினால் பொலிசாரிடம் ஒப்படைக்கப்படுவார்கள். ஒரு முறை வெளியில் சென்றால் மீண்டும் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.