June 7, 2018
தண்டோரா குழு
ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் பல்வேறு தடைகளை தாண்டி இன்று வெளியான படம் காலா.ரஜினி ரசிகர்கள் முதல் நாள் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு அதிகாலை முதலே காத்திருந்து படம் பார்த்தனர்.
இதற்கிடையில்,தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கட்சி தொண்டர்களுடன் இன்று காலா படம் பார்த்தார்.பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது,
காலா படத்தை முதல் நாளே திரையங்குக்கு வந்து பார்த்துள்ளீர்களே,ஏன் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு எங்கள் சகோதரர்கள் காலா படத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.ஆடல்,பாடல்களைக் கொண்ட காதல் படங்களைப் பார்ப்பதை விட சமூக கருத்துகளை சொல்லும் படங்களை பார்க்க எனக்கு பிடிக்கும்.அதனால் தான் காலா படத்தை அனைவரும் ஒன்றாக சேர்ந்து பார்க்க வந்தோம்.மெர்சல் பற்றி தான் தெரிவித்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.திரைப்படத்தில் தவறாக வரும் சில கருத்துகள் மனதில் பதிந்து விடுகிறது என்று தான் சொன்னேன்.அப்போது படத்தைப் பார்க்காமல் பேசிவிட்டதால்,தற்போது படம் பார்க்க வந்தேன்.
பாஜகவை இந்தப் படத்தில் விமர்சித்துள்ளதாக பேசப்படுகிறதே என்ற கேள்விக்கு,அதை நான் அப்படி பார்க்கவில்லை.படம் துவக்கத்திலிருந்து கருப்பாக இருந்த வண்ணம் இறுதியில் பல வண்ணங்களாக மாறியது.அதாவது கருப்பில் ஆரம்பித்து ஹோலியில் முடிந்தது என்பதைக் காட்டுவதாகதான் நான் பார்க்கிறேன் என்றார்.