March 18, 2021
தண்டோரா குழு
கோவை வடக்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தங்கவேல் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அப்போது அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உடன் வந்திருந்தார்.
இன்று தடாகம் சாலையில் உள்ள வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த கமல்,
பல நற்பணிகளை செய்த தங்கவேலுவை வேட்பாளராக அறிமுகம் செய்துள்ளதாகவும், இவரைப் போன்ற நல்லவரின் குரல் சட்ட சபையில் ஒலிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மநீம பொருளாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனைக்கு அரசியல் காரணமா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, அரசியலும் காரணமாக இருக்கலாம் என்று பதிலளித்தார்.
எனக்கு ஹெலிகாப்டர் தேவையில்லை எனவும், பேருந்தில் சென்று கொண்டிருந்த என்னை மக்கள் தான் ஹெலிகாப்டரில் செல்ல வைத்துள்ளனர் நான் அரசு பணத்தில் ஹெலிகாப்டரில் செல்லவில்லை. எனது பணத்தில் தான் செல்கிறேன் இதற்காக தான் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன் என கூறினார்.
எனது கட்சி நிகழ்ச்சிகளுக்கு பல இடங்களில் தடங்கல் செய்யப்படுகிறது. கல்லூரிகளில் மாணவர்களிடம் நான் பேசி விடக்கூடாது என்பதற்காகவே பூடகமாக சொல்லப்பட்டுள்ளது. எங்களது கூட்டங்களுக்கு சுலபமாக அனுமதி கிடைப்பதில்லை எனவும் தெரிவித்தார்.
குறுகிய காலத்திற்குள் செல்ல தான் ஹெலிகாப்டரை பயன்படுத்துகிறேன். வேட்பாளர்களுக்கு தோள் கொடுக்க இத்தனை இடங்களுக்கும் செல்கிறேன். எல்லோரும் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின்னர், எங்களது தேர்தல் அறிக்கை வருவது நல்லது தான், நல்ல விஷயங்கள் மக்களுக்கு கிடைக்க மநீம முன்னோடியாக இருக்கும் என தெரிவித்தார். இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் ஊதியம் தருவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார் எனவும், மற்ற கட்சிகளுக்கு முன்னுதாரணமாக மநீம திகழ மக்கள் உதவ வேண்டும் என்றும் தெரிவித்தார்.