• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாடாளுமன்ற தேர்தலுடன் 21 தொகுதிக்கான இடைத் தேர்தலையும் நடத்த வேண்டும் – தேர்தல் ஆணையத்திற்கு ஸ்டாலின் கடிதம்!

February 8, 2019 தண்டோரா குழு

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக இருக்கிற 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றால் அரசு கஜானாவிற்கு மற்றுமொரு தேர்தல் செலவு ஏற்படாமல் தவிர்க்கும் என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஸ்டாலின் அனுப்பிய கடிதத்தில்,

” 16 ஆவது மக்களவை நிறைவு பெறுவதை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும் வருகின்ற ஏப்ரல் 2019 வாக்கில் தேர்தல் நடத்தப்படும் என்பதை தாங்கள் அறிவீர்கள். தமிழக சட்டமன்றத்தில் தற்போது 21 இடங்கள் காலியாக இருக்கிறது என்பதையும் தாங்கள் அறிவீர்கள். கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து, அந்த தொகுதிகள் காலியாக இருப்பதாகவும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார். இதை எதிர்த்து முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கை விசாரிக்க இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால் அது மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்பட்டு, அந்த மூன்றாவது நீதிபதி 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று 2018- நவம்பர் 25 அன்று தீர்ப்பளித்து விட்டார். இதனால் பாதிக்கப்பட் சட்டமன்ற உறுப்பினர்கள் “சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை” என்று அறிவித்துள்ளார்கள்.

ஆகவே 18 சட்டமன்ற உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்த தீர்ப்பு இறுதி தன்மை பெற்று, அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டதும் இறுதியாகி விட்டது. ஒரு தொகுதி “காலியிடம்” என்று அறிவிக்கப்பட்டதும் ஆறுமாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தங்களுக்கு தெரிந்ததுதான். 18 சட்டமன்ற தொகுதிகளும் 18.9.2017 அன்றே காலியானதாக அறிவிக்கப்பட்டு, அது தொடர்பான வழக்கின் தீர்ப்பும் 25.10.2018 அன்றே அளிக்கப்பட்டு விட்ட நிலையில், இந்த 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதே போல் மறைந்த மு. கருணாநிதி, திருவாரூர் தொகுதி, ஏ.கே. போஸ் திருப்பரங்குன்றம் தொகுதி மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பி.பாலகிருஷ்ண ரெட்டி ஓசூர் தொகுதி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளும் காலியாக உள்ளன. திருவாரூர் தொகுதியைப் பொறுத்தமட்டில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்றைய தேதியில் 234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தில் 21 தொகுதிகள் காலியாக உள்ளன. ஆகவே இந்த தொகுதிகளுக்கு எல்லாம் உடனடியாக தேர்தலை நடத்த வில்லையென்றால் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அரசியல் சட்ட கடமையை தேர்தல் ஆணையம் மீறுவதாக அமைந்து விடும். தங்களின் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாமல் தவிக்கிறார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஏப்ரல் 2019-ல் மக்களவைத் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருப்பதாக பத்திரிக்கை செய்திகள் வாயிலாக அறிந்து கொண்டேன். ஆகவே மக்களவைத் தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.அவ்வாறு 39 மக்களவை தொகுதிக்கான தேர்தலுடன் இந்த சட்டமன்ற தொகுதிகளின் தேர்தலையும் நடத்துவது வாக்காளர்களுக்கு வசதியாகவும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கவும், தேர்தல் ஆணையம் மற்றும் அரசு ஊழியர்களுக்கு சவுகரியமாகவும் இருப்பது ஒருபுறமிருக்க, அரசு கஜானாவிற்கு மற்றுமொரு தேர்தல் செலவு ஏற்படாமல் தவிர்க்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

தனியாக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டியதில்லை என்பதால் அரசியல் கட்சிகள் அனைத்துமே இதனால் பயனடையும். மக்களவைத் தேர்தலுக்கும், இந்த 21 தொகுதிகளின் இடைத் தேர்தலுக்கும் ஒரே வாக்காளர் பட்டியல்தான் என்பதால் தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக் கோருவதில் நியாயம் இருக்கிறது என்றே கருதுகிறே ஆகவே, தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நடைபெறவிருக்கின்ற 17 ஆவது மக்களவை தேர்தலின் போதே இடைத் தேர்தலை நடத்திட வேண்டும் என்று தங்களை கேட்டுக் கொள்கிறேன் ”
என கடிதத்தில் குறிபிட்டுள்ளார்.

மேலும் படிக்க