• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நம் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ அனிதாக்கள் இருக்கிறார்கள்– சூர்யா

September 6, 2017 தண்டோரா குழு

நம் கண்ணுக்கு தெரியாத எத்தனையோ அனிதாக்கள் இருக்கிறார்கள் என நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

நீட் தேர்வால் மருத்துவ கனவு நிறைவேறாததால் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.இதனால் தமிழகம் முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பல இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில், நீட் தேர்வு குறித்து தமிழ் நாளிதழில் நடிகர் சூர்யா தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறும்போது,

லட்சக்கணக்கான ரூபாய் பணம் செலுத்தி, சிறந்த பள்ளியில் படித்து, தனிப் பயிற்சிகள் மேற்கொண்டு, நல்ல வாழ்க்கைத் தரத்தோடு இருக்கும் மாணவர்களுக்கும்,எந்த வசதி வாய்ப்பும் இல்லாத மாணவர்களுக்கும் ‘ஒரே நாடு; ஒரே தேர்வு’ என்ற பெயரில் ஒரு தேர்வை நுழைப்பது எவ்வளவு பெரிய வன்முறை. ‘நிறையப் பணம் செலவழித்துத் தனி கோச்சிங் எடுத்து ‘நீட்’ போன்ற பல்வேறு நுழைவுத்தேர்வில் வெற்றித் தகுதியை நிரூபித்த பிறகு கல்லூரியில் படிக்க வா!’என்று சொல்வதற்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது?

பாகுபாடுள்ள பள்ளிகள், பாகுபாடுள்ள கல்வி முறை, வசதிக்கேற்ற விதவிதமான பாடத்திட்டங்கள் என எல்லா நிலையிலும் பாகுபாட்டை நிறுவிவிட்டு, ஒரே விதமான தேர்வு முறையில் வெற்றி பெற வேண்டும் என்று சொல்வது நாகரிக சமுதாயம் செய்கிற வேலை இல்லை. வளர்ந்த நாடுகள் ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தைக் கல்வியின் மூலம் உருவாக்கிக் கொண்டிருக்கும் போது, இந்தியாவில் கல்வியின் மூலமே ஏற்றத்தாழ்வுகளை இன்னும் அதிகமாக்கிக்கொண்டிருக்கிறோம். நம் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ அனிதாக்கள் இருக்கிறார்கள்.

மத்திய அரசு, மாநில அரசு இரண்டுமே சேர்ந்து லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக மாற்றிவிட்டன. பொறுப்பிலுள்ளவர்களின் தவறுகளுக்கு, அப்பாவி மாணவர்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள்.ஏழைகளுக்கு ஒரு கல்வி, பணம் படைத்தவர்களுக்கு ஒரு கல்வி.

பிறகு, இருவருக்கும் ஒரே தேர்வு என்பதை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வியை அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும்.மாணவர்கள் நலனைப் பாதிக்கும் எந்தச் செயலையும் எதிர்த்து மக்கள் குரல் கொடுக்க வேண்டும். மக்கள் எதிர்ப்பு மட்டுமே இந்த அதிகார மையங்களைக் கட்டுப்படுத்தும்.

கல்வி முழுக்க முழுக்க மாநில உரிமை என்பது மீண்டும் அரசியலமைப்புச் சட்டப்படி உறுதிப்படுத்தப்பட வேண்டும்.அரசுப் பொறுப்பில் இருக்கிறவர்கள் லஞ்சம் பெற்றும் ஊழல் செய்தும் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடினால், கடுமையாக தண்டிப்பதற்கான விசேஷச் சட்டங்களை உருவாக்க வேண்டும்.

நீட் தேர்வு பற்றி மட்டும் விவாதிப்பதும், அதற்கென்று தனியாகப் போராடுவதும் முழுமை பெறாத முயற்சிகள் என்பதை இனியாவது புரிந்துகொள்வோம். நீட் தேர்வும், அது தொடர்பான பிரச்சினைகளும் நம் மோசமான கல்விச் சூழலின் கோரமான ஒரு பகுதி மட்டுமே.

காமராஜரைப் போல ஏழை எளிய மக்களின் கல்வி நலனை அக்கறையோடு பார்ப்பவர்களே இனி ஆட்சியாளர்களாக வர முடியும் என்பதை நாம் உண்மையாக்க வேண்டும். அதுவே நிரந்தரத் தீர்வுகளையும், அனிதா போன்ற அப்பாவிக் குழந்தைகளையும் காப்பாற்றும். இது மாணவர்களின் உரிமை. அதைப் பெற்றுத் தரவேண்டியது நமது கடமை.இன்றுவரை இந்தியாவின் பிற மாநிலங்களுக்குத் தமிழகம் சமூகநீதிக்கான போராட்டங்களில் முன்னுதாரணமாக விளங்குகிறது. அந்தத் தனித்துவத்தை நாம் இழந்துவிடக் கூடாது.

இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.

மேலும் படிக்க