May 25, 2018
தண்டோரா குழு
கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி வெற்றி பெற்றுள்ளார்.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பல்வேறு அரசியல் சூழலுக்கு பின்னர், மதசார்பற்ற ஜனதா தள தலைவரான குமாரசாமி,காங்கிரஸ் ஆதரவுடன் கர்நாடக முதலமைச்சராக கடந்த புதன்கிழமை பதவியேற்றார்.
பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வஜுபாய் வாலா 15 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்த போதிலும்,சட்டப்பேரவையில் குமாரசாமி இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறார்.இதற்காக குமாரசாமி பதவியேற்ற பிறகு முதல்முறையாக கர்நாடக சட்டப்பேரவை இன்று கூடியது.
இதற்கிடையில்,சபாநாயருக்கான தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட சுரேஷ் குமார் கடைசி நேரத்தில் தனது வேட்பு மனுவை திரும்ப பெற்றதால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ் குமார் போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து,முதலமைச்சர் குமாரசாமி கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார்.இதற்கிடையில்,நம்பிக்கை தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடும் முன் பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.காங்கிரஸ்,ம.ஜ.த. கூட்டணி ஆட்சியை விமர்சித்து எடியூரப்பா பேசி முடித்ததும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு 111 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை.
117 எம்.எல்.ஏக்கள் முதல்வர் குமாரசாமிக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தனர்.
பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்ததால் எதிர்ப்பின்றி பெரும்பான்மையை நிரூபித்து குமாரசாமி வெற்றி பெற்றார்.