April 17, 2021
தண்டோரா குழு
தமிழகத்தில் உள்ள கோயில்களின் பராமரிப்பு குறித்து வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் எனவும், நடிகர் விவேக் மரணம் மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
தமிழக கோவில்கள் அனைத்தும் பக்தர்கள் வசம் ஒப்படைத்து பராமரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். அதனடிப்படையில் கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பத்திரிகையாளர்கள் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
அரசு போதுமான அளவில் கோயில்களை சரியாக பராமரிப்பதில்லை பெரிய கோவில்களில் வரும் வருமானத்தைக் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது. அந்த கோவில்களில் வருமானத்தைக் கொண்டு சிறிய கோயில்களை பாதுகாத்திட வேண்டும்,அவ்வாறு அரசு செய்ய மறுத்து வருகிறது.அதே போல் கோவில்களின் நில அபகரிப்பு அதிகமாக நடைபெற்று வருகிறது எனவும்,தமிழகத்தில் தான் அதிகம் சிலை திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது எனவும் இதனை கருத்தில் கொண்டு உடனடியாக அரசு வெள்ளை அரிக்கையை வெளியிட வேண்டும் இல்லை என்றால் நீதி மன்றத்தை நாடுவேன் என தெரிவித்தார்.
மேலும் நடிகர் விவேக் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த அவர் தடுப்பூசி காரணமாக தான் உயிரிழந்தாரா என மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.