January 25, 2020
தண்டோரா குழு
நடிகர் ரஜினிகாந்திற்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் திராவிட கழகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ரஜினிகாந்த் மக்கள் மன்றம் சார்பில் கோவை கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் பத்திரிகையின் ஐம்பதாம் ஆண்டு விழாவில் ராமன் சீதை குறித்து பேசுகையில் பெரியார் குறித்தும் அவர் நடத்திய ஊர்வலம் குறித்தும் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திராவிடர் கழகம் மற்றும் திராவிடர் விடுதலை கழக நிர்வாகிகள் ரஜினிகாந்தின் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக கோவை கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தினர், பெரியார் குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த் உயிரோடு இருக்க மாட்டார் என்று மிரட்டும் தொனியில் பேசியதாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது படப்பிடிப்பு எங்கு நடந்தாலும் தடுத்து நிறுத்துவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் திராவிட கழகத்தினர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதே போல் ரஜினிகாந்த் அவர்களை பற்றி அவதூறு பரப்பி வரும் ரெட்பிக்ஸ் இணைய தளத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.