May 5, 2018
தண்டோரா குழு
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முதல்வர் பழனிசாமி வீட்டிற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடு உள்ளது. இந்தநிலையில் முதல்வர் பழனிசாமி வீட்டுக்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு சோதனை மேற்கொண்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. சோதனையின் முடிவில், அது புரளி என தெரியவந்ததை தொடர்ந்து அங்குள்ளவர்கள் நிம்மதி அடைந்தனர்.
இதையடுத்து, போலீசார் விசாரணையில், கடலூரை சேர்ந்த திலீப், சென்னை போலீஸ் கண்ட்ரோல் அறையை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையில்,சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விட்டுள்ளனர். முதல்வர் பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரே ரஜினி வீட்டிற்கும் மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.