January 23, 2026
தண்டோரா குழு
உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி, டிசம்பர் 2025-ல் முடிவடைந்த காலாண்டிற்கான தனது நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் இதன் நிகர வட்டி வருமானம் இதுவரை இல்லாத வகையில் ரூ.1000 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த காலாண்டில் வங்கி வழங்கிய கடன் ரூ.8,293 கோடியாக உயர்ந்து உள்ளதாகவும், வைப்புத் தொகை முந்தைய காலாண்டைவிட 7.7 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும், வங்கி கடன் கொடுப்பதை விட அதிக பணத்தை டெபாசிட்டாகப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.மொத்த கடன் அளவைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 21.6 சதவீதம் அதிகரித்து ரூ.37,057 கோடியாகவும், மொத்த வைப்புத்தொகை 22.4 சதவீதம் அதிகரித்து ரூ.42,223 கோடியாகவும், அடமானம் அல்லது பிணையம் உள்ள கடன்களின் அளவு ரூ.17,825 கோடியாக உயர்ந்துள்ளது.
இப்போது வங்கியின் மொத்த கடனில் 48.1 சதவீதம் பாதுகாப்பான கடன்களாக உள்ளன. வங்கியின் மொத்த கடன் புத்தகம் ரூ.37,057 கோடியாக உள்ளது. பாதுகாப்பான கடன்களின் பங்கைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு 39.3 சதவீதமாக இருந்தது, இப்போது அது 48.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.நுண் வங்கிச் சேவை மூலம் வழங்கப்பட்ட கடன் மட்டும் ரூ.4,688 கோடியாகும். இது கடந்த ஆண்டை விட 62.4 சதவீதம் அதிகம். கடன் வசூல் திறன் கடந்த டிசம்பரில் 99.7 சதவீதமாக மேம்பட்டுள்ளது. மொத்த வாராக் கடன் 2.68 சதவீதத்திலிருந்து 2.39 சதவீதமாக குறைந்துள்ளது.மொத்த வைப்புத்தொகை ரூ.42,223 கோடி உள்ளது.
தற்போதைய 3வது காலாண்டில் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு வைப்புத்தொகை ரூ.11,535 கோடியாகும். இது கடந்த ஆண்டை விட 33.2 சதவீதம் அதிகம் ஆகும். இதன் நிகர வட்டி வருமானம் ரூ.1,000 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த காலாண்டின் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.186 கோடியாகும். இது கடந்த ஆண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 70.8 சதவீதம் அதிகமாகும்.
இவ்வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சீவ் நௌடியால் கூறுகையில்,
இந்தியாவின் பொருளாதாரச் சூழல் தொடர்ந்து சிறப்பாக உள்ளது. நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்த வலுவான வளர்ச்சி, வங்கிகள் கடன் கொடுப்பதற்கும், சொத்துக்களின் தரத்தை மேம்படுத்துவதற்கும் ஏற்ற சூழலை உருவாக்கியுள்ளது.எங்கள் வங்கியைப் பொறுத்தவரை, வைப்புத்தொகை முந்தைய காலாண்டை விட 7.7 சதவீதம் மற்றும் கடந்த ஆண்டு இதே காலாண்டைவிட 22.4 சதவீதம் உயர்ந்து ரூ.42,223 கோடியை எட்டியுள்ளது. டிசம்பர் ’25 நிலவரப்படி கடன்-வைப்பு விகிதம் 88 சதவீதமாக உள்ளது. புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதிலும், ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுடன் சிறந்த தொடர்பைப் பேணுவதிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இதன் காரணமாக, தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக குறைந்த வட்டி கொண்ட சேமிப்பு கணக்குகள் 27 சதவீதத்திற்கு மேல் நீடிக்கிறது.
முதல் அரையாண்டில் வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களைக் குறைத்ததாலும், சிறந்த பணப்புழக்கத் திட்டமிடலாலும், நிதி திரட்டும் செலவு குறைந்துள்ளது. கடந்த ஆண்டை விட 49 புள்ளிகள் குறைந்து, இந்த காலாண்டில் இது 7.08 சதவீதமாக உள்ளது.வங்கியின் மொத்த கடன் புத்தகம் ரூ.37,057 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய காலாண்டை விட 7.1 சதவீதம் மற்றும் கடந்த ஆண்டின் இதே காலாண்டைவிட 21.6 சதவீதம் அதிகமாகும். இதற்கு முக்கிய காரணம், இந்த காலாண்டில் நாங்கள் வழங்கிய அதிகபட்ச கடன் தொகையான ரூ.8,293 கோடியாகும்.
ஈடுபெற்ற மற்றும் ஈடுபெறாத கடன்கள் என இரண்டிலும் நல்ல செயல்பாடு இருந்தது. எங்கள் நீண்ட காலத் திட்டத்தின்படி வீடு, சிறு தொழில், தங்கம், வாகனம் மற்றும் விவசாயக் கடன்கள் போன்ற பாதுகாப்பான கடன்கள் அதிகரித்துள்ளன. தற்போது மொத்தக் கடனில் பாதுகாப்பான கடன்களின் பங்கு 48 சதவீதமாக உள்ளது என்று தெரிவித்தார்.