November 30, 2021
தண்டோரா குழு
கோவை குனியமுத்தூர் அண்ணாநகரை சேர்ந்தவர் செந்தில்குமார்(41). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு பிகே புதூர் வீரவிநாயகர் கோயில் அருகே சுவரில் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தார். அப்போது இருட்டாக இருந்ததால் பைக்கின் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு போஸ்டர் ஒட்டினார்.
அந்த வழியாக வந்த சில வாலிபர்கள் ‘கண் கூசுகிறது, லைட்டை ஆப் பண்ணு’ என கூறி தகராறு செய்தனர். இதில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அவர்கள் செந்தில்குமாரை தகாத வார்த்தைகளால் பேசி கீழே தள்ளி அவரை சரமாரியாக தாக்கி மிரட்டி விட்டு சென்றனர். இது குறித்து செந்தில்குமார் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் தாக்குதல், கொலை மிரட்டல் வழக்குபதிவு செய்து இடையர்பாளையம் பகவதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சூர்யா(23), சர்ச் தெருவை சேர்ந்த வினேஷ்(24), பிகே புதூர் மதுரை வீரன் கோயில் தெருவை சேர்ந்த விகாஷ்(21) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தலைமறைவாக உள்ள விகாஷ் தந்தை சித்திரகுமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.