March 18, 2021
தண்டோரா குழு
கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிட காய்கறி மாலை, மண்வெட்டி, மண் அடுப்புடன்
நூர் முகமது மதுக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நூர் முகமது (63). ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவர் சுயதொழில் செய்து வருகிறார். கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் வார்டு கவுன்சிலர், எம் எல் ஏ , எம் பி என இதுவரை 35 தடவை தேர்தலில் நின்று குறைவான வாக்குகளே பெற்றுள்ளார். ஆண்டிப்பட்டி, சாத்தான் குளம் , திருச்செந்தூர், மதுரை மேற்கு , பென்னாகரம், ஆர் கே நகர், திருமங்கலம் உள்ளிட்ட இடைத்தேர்தல்களில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்.
தற்போது 36 ஆவது முறையாக கோவை கிணத்துக்கடவு தொகுதி சுயேச்சை வேட்பாளராக போட்டியிட விரும்ப மனுவை அளிக்க காய்கறி மாலையுடனும், மண்வெட்டி, மண் அடுப்பு கருவேப்பிலை கொத்துமல்லியுடன் வந்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் உள்ள பகுதிக்கு வந்ததும் காவல் துறையினர் காய்கறி மாலை, மண்வெட்டி, மண் அடுப்பை வாங்கி வைத்துக்கொண்டு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து மதுக்கரை வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அம்சவேணியிடம் தனது விருப்ப மனுவை நூர் முகமது வழங்கினார்.விவசாயிகள் டெல்லி போராடிய போது இந்த அரசு ஒன்றும் செய்யவில்லை எனவும்,கேஸ் விலையேற்றத்தை கண்டித்தும் இந்த தோற்றத்தில் வந்ததாக தெரிவித்தார்.
தொடர்ந்து தோற்றாலும் மக்களிடம் மாற்றத்தை கொண்டு வருவதற்காக போட்டியிடுவதாகவும் தெரிவித்தார். வெற்றி தோல்வி என்பதை தனக்கு பிரச்சாரம் செய்ய ஆளில்லை என்ற போதும் , ஒவ்வொரு தேர்தலிலும் , முகம் தெரியாத மக்கள் தனக்கு ஆதரவளித்து வருவதாக குறிப்பிட்டார்.