March 2, 2021
தண்டோரா குழு
சமையல் எரிவாயு விலை நேற்று மேலும் ரூ.25 உயர்ந்து தற்போது ஒரு சிலிண்டர் ரூ.835க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து விலையேறுவதால் இல்லத்தரசிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சர்வேதேச கச்சா எண்ணெயின் மார்க்கெட் நிலவரத்தை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயம் செய்யப்படுகிறது. சமையல் எரிவாயு மாதத்திற்கு ஒரு முறை விலையேற்றம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் 3 முறை மானியமில்லா சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டது.
முறையே பிப்.4ம் தேதி ரூ.25ம், பிப்.15ம் தேதி ரூ.50ம், பிப்.26ம் தேதி ரூ.25ம் என ஒரே மாதத்தில் ரூ.100 விலையேற்றம் செய்யப்பட்டு ரூ.810க்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கு இல்லத்தரசிகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று மீண்டும் சமையல் எரிவாயு விலை ரூ.25 உயர்த்தப்பட்டு ரூ.835க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரை பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து கோவை சேர்ந்த இல்லத்தரசி மனோன்மணி கூறுகையில்,
‘‘சமையல் சிலிண்டர் விலை கடந்த மாதம் 3 முறை உயர்த்தப்பட்டது. தற்போது 4 வது முறை உயர்த்தப்பட்டது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரூ,710 ஆக இருந்த விலை தற்போது வரை ரூ.125 அதிகரித்துள்ளது. ஏற்கனவே வேலைவாய்ப்பு இல்லாமல் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்து வரும் வேலையில் இந்த விலையேற்றம் சாதாரண மக்களை வெகுவாக பாதித்துள்ளது. அதிகளவு குடும்ப உறுப்பினர்களை கொண்ட வீட்டுக்கு கிட்டத்தட்ட மாதத்திற்கு 3 சிலிண்டர் வரை வாங்க வேண்டியிருக்கிறது. இதற்காக ரூ.2500 வரை செலவிட வேண்டி உள்ளது. இது எங்களுக்கு பொருளாதார சுமையை மேலும் கூட்டுகிறது.’’ என்றார்.
கோவை அன்னூரை சேர்ந்த மில் தொழிலாளி ஈஸ்வரி கூறுகையில்,
”சிலிண்டர் விலை ஒன்றுக்கு ரூ.835-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிலிண்டர் கொண்டு வரும் ஊழியருக்கு ரூ. 30 என மொத்தம் ஒரு சிலிண்டர் பெறுவதற்கு ரூ.835 வரை செலவிட வேண்டியுள்ளது. எனக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அவர்களின் படிப்பு செலவுகள், இதர செலவுகள் மற்றும் சாப்பாட்டுச் செலவுகளை சமாளிக்கவே வருமானம் பற்றாக்குறையாக உள்ளது. மில் வேலைக்கு சென்று வரும் எனக்கு கடந்த சில மாதங்களாக கொரோனா காரணமாக சரிவர வேலை வாய்ப்பும் இல்லை. எனவே மத்திய அரசு ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு விலை ஏற்றத்தை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். ஏற்கனவே மத்திய அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த தொடர் விலையேற்றம் மத்திய அரசின் நன் மதிப்பை மக்களிடையே இழந்து வருகிறது” என்றார்.
கோவை போத்தனூரை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் புஷ்பா என்பவர் கூறுகையில்,
”சிலிண்டர் விலை ஏற்றம் அடித்தட்டு மக்களை மிகவும் பாதித்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக செயல்பட்டு வருகிறது. இதே நிலைமை நீடித்தால் பழையபடி விறகு அடுப்பில் சமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். விரைவில் ஒரு சிலிண்டர் ரூ. ஆயிரத்தை தொட்டுவிடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மத்திய அரசு எளியவர்களை கவனத்தில் கொண்டு இந்த விலையேற்றத்தை குறைக்க வேண்டும்.” என்றார்.