December 22, 2016
தண்டோரா குழு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு (டி.என்.பி.எஸ்.சி.) நியமிக்கப்பட்ட 11 புதிய உறுப்பினர்களின் நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
கடந்த ஜனவரி 31ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைத்திற்குப் புதிதாக 11 உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை எதிர்த்தும், நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க. சார்பிலும் புதிய தமிழக கட்சியின் நிறுவனர் வழக்கறிஞர் கிருஷ்ணசாமி, பாமகவின் வழக்கறிஞர் பாலு ஆகியோர் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்களை வியாழக்கிழமை விசாரித்த தலைமை நீதிபதி கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைத்தின் 11 பேரது நியமனமும் முறைப்படி நடக்கவில்லை. தகுதி இல்லாதவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே நியமன ஆணை ரத்து செய்யப்படுகிறது என உத்தரவு பிறப்பித்தனர்.