February 27, 2021
தண்டோரா குழு
தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்க
கோவை மாவட்டத்தில் 30 பறக்கும் படைகள்
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் சட்டமன்றங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் தேர்தல் அதிகாரியாக மாவட்ட கலெக்டர் ராஜாமணி நியமிக்கப்பட்டுள்ளார்.கோவையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக பறக்கும் படைகள் அமைக்கப்பட உள்ளன.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,
‘கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் விதிகளை மீறி பணம் மற்றும் பொருட்கள் எடுத்து செல்வோரை கண்காணிக்க 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட உள்ளன. இவர்கள் 10 தொகுதிகளிலும் செக் போஸ்ட் அமைத்து சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள்.
ஒரு தொகுதிக்கு 3 பறக்கும் படைகள். 8 மணி நேரம் சுழற்சி அடிப்படையில் பணியாற்றுவார்கள்.பறக்கும் படையில் வட்டாட்சியர் அல்லது வட்டாட்சியர் பதவி மதிப்பின் அடிப்படையில் 1 அதிகாரியும், வருவாய் துறை, காவல்துறை என மொத்தம் 7 பேர் வரை பணியாற்றுவார்கள்.இவர்கள் வாகனங்களை முழுவதுமாக பரிசோதனை செய்து தீவிரமாக கண்காணிப்பதுடன். தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார் குறித்தும் நடவடிக்கை எடுப்பார்கள்,’’ என்றனர்.
மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் மேம்பாலங்கள், சாலையோர சுவர்கள் என மாநகர் பகுதிகளில் உள்ள இடங்களில் உள்ள அரசியல் போஸ்டர்கள், பதாதைகள், விளம்பரங்கள் உள்ளிட்டவற்றை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினார்கள். அவினாசி மேம்பாலம், காந்திபுரம் மேம்பாலம் உள்ளிட்டவற்றில் உள்ள போஸ்டர்கள் அகற்றப்பட்டு அங்கு மீண்டும் வண்ணம் பூசப்பட்டது.
அதே போல் தலைவர்களின் சிலைகளும் மறைக்கப்பட்டன.அதே போல் ச்கோவை மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் அலுவலகங்கள் மூடல். நேற்று முன் தினம் 4.30 மணிக்கு தேர்தல் அறிவிப்பு வெளியானது. இதனை அடுத்து 24 மணி நேரம் வரை எம்.எல்.ஏக்கள் அலுவலகத்தில் உள்ள பொருட்களை எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் அலுவலகத்தில் உள்ள பொருட்கள் எடுக்கப்பட்டு அலுவலகங்கள் மூடப்பட்டன.