• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேச விரோதிகள் என்று பேசுவதை எச்.ராஜா உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்–மு.க.ஸ்டாலின்

March 31, 2017 தண்டோரா குழு

“தேச விரோதிகள்” என்று பேசுவதை பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சோனியா காந்தியை தரக்குறைவாக விமர்சித்திருக்கும் பாரதீய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் எச்.ராஜாவுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நாகரீகமான அரசியலையும், ஆரோக்கியமான விவாதங்களையும் விரும்புகிறோம் என்று கூறி வரும் பா.ஜ.க.,வின் தேசியத் தலைவர்கள் எச்.ராஜா போன்றவர்களின் பேச்சுக்களுக்கு எப்படி ஆக்கமும் ஊக்கமும் அளித்து, அவருக்கு ரயில்வே துறையிலும் அரசு பொறுப்பை வழங்கியிருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

இன்றைக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் மனதில் வாழும் தந்தை பெரியாயாரை ஏற்கனவே கொச்சைப்படுத்தி பேசிய எச்.ராஜா பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜாவின் மகனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் கொடூரமாக மிரட்டினார். இப்போது சோனியா காந்தியை கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார்.

இதுமட்டுமின்றி பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டால் “நீ இந்திய விரோதி” என்று ஆவேசமாகவும், ஆணவமாகவும் கை நீட்டிப் பேசுகிறார்.

“நாம் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் தரக்குறைவாக விமர்சிக்கலாம். மிரட்டும் தொனியில் பேசலாம். நம்மை யார் என்ன செய்ய முடியும்?’ என்ற ஆதிக்க மனப்பான்மையில் இருந்து எச்.ராஜா விடுபட முடியாமல் தவிப்பது தெரிகிறது. தமிழக பா.ஜ.க.,விற்குள் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கருதினால் அதற்கு அவர் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடலாமே தவிர, இது போன்று பத்திரிக்கையாளர்களையும், அரசியல் கட்சித் தலைவர்களையும், தேசம் போற்றும் தலைவர்களையும் அநாகரீகமாக விமர்சிப்பது அவர் வகிக்கும் அரசு பதவிக்கும் அழகல்ல. அவர் சார்ந்திருக்கும் ஒரு தேசிய கட்சிக்கும் ஏற்ற இலக்கணம் அல்ல.

‘தேசபக்தி’ என்பதும் ‘இந்தியன்’ என்பதும் ஏதோ தனக்கு மட்டுமே நிரந்தர குத்தகைக்கு விடப்பட்டது போல மற்றவர்களை ‘தேச விரோதிகள்’ என்றும் ‘இந்திய விரோதிகள்’ என்றும் பேசுவதை அவர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பதையும், தேசபக்தியில் தமிழர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதையும் எச்.ராஜா போன்றவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அவர் உணரத் தவறினால் பா.ஜ.க.,வின் தேசிய தலைமை, தந்தை பெரியார், அன்னை சோனியா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா, பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோர் மீது அவதூறான கருத்துக்களைப் பேசும் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க