July 23, 2021
தண்டோரா குழு
தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.இதனால் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.கனமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் பல இடங்களில் புது அருவிகள் உருவாகியுள்ளன. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சித்திரைச்சாவடி தடுப்பணை நிரம்பி வழிந்தது. அதே போல் மழை காரணமாக புதுக்குளம், நரசம்பதி, கோளராம்பதி, பேரூர் சொட்டையாண்டி குளம், குனியமுத்தூர் செங்குளம், கங்க நாராயண சமுத்திர குளம் உள்ளிட்ட குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் 535.10 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதன்படி சின்கோனா 102, சின்னக்கல்லார் 115, வால்பாறை 93, சோலையார் 102, ஆழியார் 4.6, பொள்ளாச்சி 11, மேட்டுப்பாளையம் 16, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ,0.5 என்று மொத்தமாக 535.10 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதன் சராசரி 38.2 மில்லி மீட்டராகும்.