July 25, 2018
தண்டோரா குழு
கோவையை சேர்ந்த 51 வயது பெண்,தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக காரில் தனியாக இந்தியா முழுவதும் வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
கோவையை பூர்வீகமாக கொண்ட சங்கீதா (வயது 51) என்ற பெண்மணி அபுதாபியில் வசித்து வருகிறார்.தூய்மை இந்தியா குறித்து இந்தியாவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்,இந்தியா முழுவதும் பயணம் செய்ய முயற்சி மேற்கொண்டு உள்ளார்.
தூய்மை குறித்தும்,சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வருகிற ஆகஸ்ட் 12 ஆம் தேதி மும்பையில் இருந்து தனது பயணத்தை துவங்கவுள்ளார்.இந்தியா முழுவதும் காரிலேயே தனியாக பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 310 ஊர்களில் சென்று அங்கு தூய்மை குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி, கழிப்பறை வசதி இல்லாத ஊர்களை படம் பிடித்து,அதனை அதிகாரிகளுக்கும் அனுப்பவுள்ளார். இதன் மூலம் விரைவில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுவதோடு,எந்தெந்த பகுதிகளில் சுகாதாரம் குறைவாக உள்ளது என்பதையும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாக கூறி உள்ளார்.
காரிலேயே வீட்டில் இருக்கும் அனைத்து வசதிகளும் அடங்கியவாறு டாடா நிறுவனம் இதற்காக பிரத்யேகமாக தயாரித்து உள்ளது.அடுத்த வருடம் 2019 பிப்ரவரி 15 ஆம் தேதியுடன் தனது பயணத்தை முடித்து கொள்ள உள்ளார்.மொத்தம் 29,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும்,இதன் மூலமாக அனைத்து பகுதி மக்களுக்கும் தூய்மையை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பயணத்தை துவங்க உள்ளதாக கூறினார்.