June 27, 2018
தண்டோரா குழு
தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக மே 22ம் தேதி கைது செய்யப்பட்ட 65 பேரின் ஜாமீனை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மே 22ம் தேதி பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது.அந்த போராட்டம் வன்முறையாக வெடித்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அதனை தொடர்ந்து 65 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு அவர்களை மாவட்ட நீதிபதி முன்பு ஆஜர்படுத்தும் போது அவர் சொந்த ஜாமீனில் 65 பேரையும் விடுவித்தார்.இவர்களுக்கு மாவட்ட நீதிபதி ஜாமீன் அளித்ததை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரனை நடைபெற்று வந்த நிலையில் இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் மனு விசாரனைக்கு வந்தது.
அப்போது காவல்துறை வழக்கு போட்ட 65 பேர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க எந்தவித ஆதாரத்தையும் தாக்கல் செய்ய முடியவில்லை ஆகையால் 65 பேரின் ஜாமீனை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டார்.