June 18, 2018
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிப்பதே சரியானது என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தின் 100-வது நாளன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.அப்போது போராட்டம் வன்முறையாக மாறியது.இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர்.
இதற்கிடையில்,இந்த சம்பவம் தொடர்பாக, தடயவியல் நிபுணர்கள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில்,இம்மனு இன்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது,மனுவை விசாரித்த நீதிபதி,தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும் என்றும் மனுதாரர் சிபிஐயிடம் மனு கொடுக்கலாமே என யோசனை தெரிவித்தார்.மேலும்,இந்த மனு தொடர்பாக தமிழக அரசு ஒருவாரத்தில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டடுள்ளது.