May 23, 2018
தண்டோரா குழு
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து கோவையில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சிகள் சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற பேரணியில் கலவரம் வெடித்ததை அடுத்து,காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தை கண்டித்து தமிழக முழுவதும் பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் துப்பாக்கி சூட்டிற்கு காரணமான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு உணவகம் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் எடப்பாடி அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
தூப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.இதே போல கோவை டாடாபாத் பகுதியில் தந்தை பெரியார் திராவிட கழகம், மதிமுக,மக்கள் அதிகாரம்,விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.இதில் மத்திய மாநில அரசுகளின் அராஜக போக்கை கண்டித்து முழக்கமிட்டனர். துப்பாக்கி சூடு நடத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டதாக அமைச்சர் ஜெயகுமார் கூரிய விளக்கத்திற்கும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் மீத்தேன்,ஹைட்ரோகார்பன் திட்டம் போன்றவற்றிக்கு எதிராக போராடாமல் தடுக்கவே, தூத்துக்குடியில் காவல்துறையை வைத்து அராஜக போக்கை கட்டவிழ்த்து விடப்பட்டதாக குற்றம்சாட்டினர்.இதே போல கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக நாம் தமிழர் கட்சியினரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் சுமார் 400 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.