May 23, 2018
தண்டோரா குழு
தூத்துக்குடியில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை தமிழக அரசு நியமித்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து,போலீசார் தடியடி நடத்தியதால் பொதுமக்கள் கல்வீசி அவர்களை தாக்கினர். போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.போராட்டகாரர்களை காவல்துறையால் தடுக்க முடியாததால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உள்பட 11 பேர் பலியானார்கள்.பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில்,தூத்துகுடியில் தூப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூப்பாக்கிச்சூடு தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.