November 3, 2025
தண்டோரா குழு
கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள தி கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியில், 16 வது பள்ளி ஆண்டு விழா மற்றும் நிறுவனர் தின விழா பள்ளியின் தலைவர் அருள் ரமேஷ்.தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் பள்ளி முதல்வர் பூனம் சியால் பள்ளியின் ஆண்டு அறிக்கையை வாசித்து அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனரும் (DRDO), ஸ்பிக் அமைப்பின் இயக்குனருமான டாக்டர் M. மாணிக்கவாசகம் கலந்து கொண்டு மாணவர்களிடையே பேசினார்.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தலைவர்களால் நடத்தப்பட்ட உச்சி மாநாட்டில் (Global Leaders Education Summit) இந்தியாவிலேயே சிறந்த பள்ளியாக ‘தி கேம்போர்டு சர்வதேச பள்ளி’ அங்கீகரிக்கப்பட்டதற்காக பள்ளி நிர்வாகத்தை பாராட்டுவதாக அவர் தெரிவித்தார்.
மக்களின் ஜனாதிபதி என போற்றப்படும் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் தாம் பணியாற்றியதை நினைவு கூர்ந்து நெகிழ்ச்சி அடைந்தார்.மாணவர்கள் முயற்சிகளை கைவிடாமல் வெற்றி பெற வேண்டும் என்று கூறிய அவர்,கடின உழைப்பும்,பயிற்சியும் இருந்தால் நல்ல வாய்ப்புகள் தேடி வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
குறிப்பாக நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்களின் பங்கு மிக அவசியம் என அவர் குறிப்பிட்டார்.தொடர்ந்து நடைபெற்ற விழாவில் 2024 -25 கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் இணைந்து ஒருங்கிணைத்த இசை, நடனம் மற்றும் நாடகம் உள்ளிட்ட பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை பார்வையாளர்களாக வந்த பெற்றோர்கள் கண்டு ரசித்தனர்.