March 19, 2018
தண்டோரா குழு
கோவையில் புதிதாக கட்டப்பட்ட படிப்பக கட்டிடம் இரண்டு ஆண்டுகளாய் திறப்பு விழா செய்யாததை கண்டித்து வாலிபர் சங்க அமைப்பினர் சீர்வரிசை தட்டுடன் நூதன முறையில் மாவட்ட ஆட்சியரிடம் இன்று(மார்ச் 19) மனு அளித்தனர்.
கோவை செல்வபுரம் எல்ஐசி காலனி பகுதியில் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் படிப்பக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.இந்த படிப்பக கட்டிடம் மற்றும் குழந்தைகள் விளையாட்டு பூங்கா 2016 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. கட்டி முடிக்கபட்டு இரண்டு ஆண்டுகள் ஆன நிலையிலும் இதுவரை திறப்புவிழா செய்யப்படவில்லை. இதுகுறித்து வாலிபர் சங்கம் பல முறை மனுவளித்தும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில்,திறப்புவிழாவிற்கு தேதி குறிக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று புத்தகங்களை தட்டில் வைத்து சீர்வரிசையோடு மாவட்ட ஆட்சியரிடம் நூதனமாக மனு அளிக்க வந்தனர்.இதில் வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ்,பொருளாளர் சீலாராஜ், நிர்வாகிகள் நிசார்அகமது,பாலு,விஜய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.