January 11, 2021
தண்டோரா குழு
கோவையில் வரும் 15ம் தேதி இறைச்சி கடைகள் செயல்படாது என மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் கூறியிருப்பதாவது:
திருவள்ளுவர் தினம் வரும் 15ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அன்றைய தினம் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை மூடும்படி தெரிவிக்கப்படுகிறது.
அன்றைய தினம் மாநகராட்சியால் நடத்தப்பட்டு வரும் உக்கடம் ஆடு அறுவைமனை, சிங்காநல்லூர்ஆடு அறுவைமனை, சத்தி ரோடு, போத்தனூர் மாடு அறுவைமனைகள், துடியலூர் ஆடு அறுவைமனை மற்றும் மாநகராட்சியின் கீழ் இயங்கும் 10 மாநகராட்சி இறைச்சி கடைகள் செயல்படாது.இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது மாநகராட்சி அதிகாரிகளால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் கூறியுள்ளார்.