April 16, 2018
தண்டோரா குழு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடைபெற்று வரும் போராட்டத்தில் புதுமணத் தம்பதிகள் மணக்கோலத்தில் கலந்து கொண்டனர்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி புதுப்பிக்கப்படாததால் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை, நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி நகரின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா ஆலயத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இரண்டாவது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. ஆலய வளாகத்தில் பந்தல் அமைத்து கருப்புக்கொடி கட்டி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புதுத்தெரு பகுதியைச் சேர்ந்த ஜோசப் – ஷைனி தம்பதியின் திருமணம் திரு இருதய ஆலயத்தில் நடைபெற்றது. இதையடுத்து, திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் வீட்டிற்கு செல்லாமல் மணக்கோலத்தில் பனிமயமாதா ஆலயத்திற்கு வந்து போராட்டப் பந்தலில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்த தம்பதியினர்,
ஸ்டெர்லைட் ஆலையால் பலருக்கும் கேன்சர் பரவுகிறது. அதிகம் குழந்தைகள் தான் கேன்சரால் பாதிக்கபட்டு உயிரிழக்கின்றனர். நோயற்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்ற நோக்கத்துடன் போராட்டத்தில் கலந்து கொண்டதாக கூறினர்.