June 29, 2021
தண்டோரா குழு
திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஆருகே மாட்டிறைச்சி விற்கக்கூடாது என மாட்டிறைச்சி உரிமையாளரை எச்சரித்த வட்டாட்சியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கானாங்குளம் பகுதி உள்ளது.
இப்பகுதியில் வேலுச்சாமி என்பவர் மாட்டிறைச்சி கடை நடத்தி வருகிறார். இதற்கிடையில், அவரது இறைச்சி கடைக்கு இரவு நேரத்தில் சென்ற அவிநாசி வட்டாட்சியர் தமிழ்ச் செல்வன், ஆடு, கோழி இறைச்சி விற்பனை செய்யலாம், மாட்டிறைச்சி விற்கக்கூடாது என வேலுச்சாமியை எச்சரித்தார்.
அப்போது, மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்படவில்லை, அனைவரும் மாட்டு இறைச்சி விற்பனை செய்வதை நிறுத்தினால் தானும் நிறுத்துவதாக வேலுச்சாமி கூறியுள்ளார். இதற்கு வேலுச்சாமியை மட்டும் சொல்லவில்லை, இந்த பகுதியில் அதிகமாக நடப்பதாகவும், மாடுகள் வதைக்கப்படுவதாக இங்கு புகார் வந்ததால் தான் மாட்டிறைச்சி விற்பனை செய்யக் கூடாது என தமிழ்செல்வன் கண்டிப்புடன் கூறியுள்ளார்.
இதையடுத்து, பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.இந்நிலையில், ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்திற்கு தமிழ்செல்வன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.