October 6, 2018
தண்டோரா குழு
தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
டில்லியில் இன்று( அக்.,6) செய்தியாளர்களை தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 12-ம் தேதி முதல்கட்டத் தேர்தல் நடத்தப்படும். வடக்கு சத்தீஸ்கரில் நவம்பர் 20-ம் தேதியும், நவம்பர் 28-ல் மத்தியப்பிரதேசம் மற்றும் மிசோரத்தில் தேர்தல் நடத்தப்படும். நவம்பர் 20-ம் தேதி வடக்கு சத்தீஸ்கரில் தேர்தல் நடைபெறும். அதனை தொடர்ந்து ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலத்தில் டிசம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்தார்.
மேலும், இதனை தொடர்ந்து டிசம்பர் 11-ல் 5 மாநில சட்டபேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதியான முறையில் தேர்தல் நடத்தப்படும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது. தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவமும் பயன்படுத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைவை ஒட்டி, திருவாரூர் தொகுதியும், அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., போஸ் மறைவை ஒட்டி திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக உள்ளன. இதையடுத்து, இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி குறித்து ராவத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது ” கன மழை காலம் உள்ளிட்ட விஷயங்களை சுட்டிக்காட்டி தமிழக தலைமை செயலாளர் தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதி இருந்தார். திருப்பரங்குன்றம் தொகுதி வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, 2 தொகுதிகளின் இடைத்தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்,” என்றார்.