March 8, 2018
தண்டோரா குழு
திருவெறும்பூரில் காவல் ஆய்வாளரால் உயிரிழந்த கர்ப்பிணி பெண் உஷாவின் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
திருச்சி திருவெறும்பூர் கணேஷா ரவுண்டானா பகுதியில் திருவெறும்பூர் போலீஸார் ஹெல்மெட் சோதனையில் நேற்று இரவு 7.30 மணியளவில் ஈடுபட்டனர். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் பாபனாசம், சூலமங்கலம் புதுத்தெருவை சேர்ந்த தம்பதியர் ராஜா (என்ற) தர்மராஜ், உஷா (30) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். உஷா 3 மாத காப்பிணி. போலீஸார் கைகாட்டி நிறுத்தாததால், மற்றொரு வாகனத்தில் காவல் ஆய்வாளர் காமராஜ் துரத்தி சென்று, தம்பதியர் சென்ற வாகனத்தை எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. இதில், தம்பதியர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர். பின்னால் வந்த வேன் ஏறியதில் 3 மாத கர்ப்பிணியான உஷா சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று இரவு சுமார் 3000ம் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதையடுத்து, கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் பணியிடைநீக்கம் செய்யபட்டுள்ளார்.
இந்நிலையில், திருவெறும்பூரில் காவல் ஆய்வாளரால் உயிரிழந்த கர்ப்பிணி பெண் உஷாவின் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 7 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.