• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

”திருக்குறளில் ஆன்மிக கருத்துகள் உள்ளன” – ஆளுநர் ஆர்.என்.ரவி !

January 7, 2022 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குறள் மலை சங்கம் சார்பில் உலக திருக்குறள் மாநாடு இன்று நடைபெற்றது.

கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி வரவேற்றார்.இதில், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தலைமை தாங்கி மாநாட்டினை துவக்கி வைத்தார்.

இவ்விழாவில் அவர் பேசுகையில்,

தமிழகம் ஒரு புண்ணிய பூமி. திருவள்ளுவர், அகத்தியர் போன்ற சிறந்த நபர்களை அளித்துள்ளது. விவேகானந்தர் போன்றவர்கள் ஆன்மீக மூலம் இளைஞர்களுக்கு பல அறிவுரைகளை வழங்கி உள்ளனர். நான் மாணவனாக இருந்த போது சில திருக்குறளை படித்து உள்ளேன். அப்போது தமிழில் அதை படிக்கவில்லை. ஆனால், இப்போது தமிழ் கற்றுக் கொள்கிறேன். முதல் குறளில் ஆதிபகவன் என கூறப்பட்டுள்ளது.

இதேபோல் ரிக் வேதத்தில் இதே போன்ற ஆதிபகவன் குறித்து பேசப்பட்டுள்ளது. திருக்குறளில் ஆன்மிகம் உள்ளது. அரசியல் சித்தாந்தங்களுக்காக அந்தக் கருத்துக்களைப் புறக்கணிக்கக் கூடாது. அது திருக்குறளுக்கு நாம் செய்யும் அநீதி. திருக்குறள் பிறப்பு, இறப்பு, ஆன்மீகம், அரசியல் குறித்தும் பேசுகிறது. ஆராய்ச்சியாளர்கள் மொழிமாற்றம் செய்யும் போது அதன் உள் அர்த்தம் மாறுவதை தவிர்க்க வேண்டும். ஆன்மீகம் கொள்ளவும், பக்தி கொள்ளவும் தனியாக காரணம் தேவையில்லை.

திருக்குறளின் மகிமை பாதுகாக்கப்பட வேண்டும். நாம் நல்ல மனிதராக வாழ திருக்குறளினை தினமும் படித்து, அதை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். அமைதியான வாழ்க்கையை நடத்த திருக்குறளில் சொல்லப்பட்டுள்ளது. திருக்குறளில் உள்ள ஒவ்வொரு வரியும் பல நல்ல விஷயங்களை எடுத்துக் கூறுகிறது. ஒவ்வொரு குறளிலும் உள்ள ஏழு வார்த்தைகளையும் உண்மையாக புரிந்து படித்தால் வாழ்க்கையில் எல்லோரும் போற்றும் நிலையை அடைய முடியும்.

திருக்குறள் நமது வாழ்க்கையை உயர்த்தும் ஏணியாக உள்ளது. வாழ்க்கையில் முன்னேற நல்ல செயல்களை பின்பற்றுங்கள். திருக்குறள் உலகிற்கு ஒரு உதாரணமாக உள்ளது என்றார்.

நிகழ்ச்சியில், கல்வெட்டில் திருக்குறள் என்ற திருக்குறள் நூலை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார். தொடர்ந்து 10 மாணவர்களுக்கு சிறந்த தமிழ் மாணாக்கர் சான்றிதழ்களையும், 5 தமிழ் சான்றோர்களுக்கு விருதுகளையும் வழங்கினார்.நிகழ்ச்சியில், குறள் மலை பெருநீதிப் பெருமகனார் விருது சென்னை உயர்ந்திமன்ற முன்னாள் நீதிபதி என்.கிருபாகரன், குறள் மலை வாழ்நாள் சாதனையாளர் விருது கோவை கேஎம்சிஎச் மருத்துவமனையின் தலைவர் நல்லா ஜி பழனிசாமி, குறள் மலை மனுநீதிச் சோழன் விருது, கோவை மனுநீதி அறக்கட்டளையின் தலைவர் மனுநீதி மாணிக்கம் மற்றும் குறள் மலை சிறந்த கல்வியாளர் விருது கோவை எஸ்எஸ்விம் கல்வி நிறுவனத்தின் தலைவர் மணிமேகலை மோகன்தாஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

மேலும், இம்மாநாட்டில் 1330 திருக்குறளையும் மலையிலே கல்வெட்டில் பதித்து திருக்குறள் மலை உருவாக்கப்பட வேண்டும். மலையிலே கல்வெட்டில் பதிக்கப்படும், திருக்குறளை உலக நூலாக யுனெஸ்கோ நிறுவனம் அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில் தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுப்பிரமணியம், கவிஞர் கவிதாசன், விகாஸ் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆண்டவர் ராமசாமி, குமாரபாளையம் எஸ் எஸ் எம் கல்வி நிறுவனங்களின் தலைவர் கவாலியர் மதிவாணன், கரூர் வள்ளுவர் கல்வி நிறுவனங்களின் தலைவர் செங்குட்டுவன், திருப்பூர் முத்தமிழ் சங்கத்தின் தலைவர் கேபிகே செல்வராஜ், கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி சுந்தரராமன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கலை கல்லூரியின் முதல்வர் பேபி ஷகிலா, குறள் மலை சங்கத்தின் தலைவர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க