January 2, 2021
தண்டோரா குழு
கோவையில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்திற்கு, அதிமுகவினரை திட்டமிட்டு அனுப்பவில்லை என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திமுக புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேவராயபுரம் ஊராட்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் தாக்கப்பட்ட பூங்கொடி உள்ளிட்ட 5 பேரை, கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது இதுபோல (திமுக கூட்டங்களுக்கு) போக வேண்டாம் என அமைச்சர் அறிவுரை கூறினார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,
திமுக தலைவர் ஸ்டாலின் மக்கள் கிராம சபைக் கூட்டம் என பொதுக்கூட்டம் நடத்தியுள்ளார். 2 ஆயிரம் ஆண்டு பழமையான பெருமாள் கோவிலை மறித்து மேடை அமைத்துள்ளனர். கோவிலுக்கு சென்றவர்கள் கேள்வி எழுப்பிய போது, பதில் சொல்லாமல் குண்டர்களை வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
தாழ்த்தப்பட்டவர்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியது மோசமான செயல் எனவும், வெறிக்கொண்டு தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார். இந்த தாக்குதலுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியாக வேண்டும் எனவும், தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.எப்போதும் திமுக ஆட்சிக்கு வரப் பேவதில்லை எனவும், ஸ்டாலின் பதவி வெறி பிடித்து அலைகிறார் எனவும் அவர் கூறினார். அதிமுகவினரை திட்டமிட்டு அக்கூட்டத்திற்கு அனுப்பவில்லை எனவும், அதுபோன்ற கீழ்தரமான எண்ணம் தங்களுக்கு கிடையாது எனவும் கூறிய அவர், அக்கூட்டத்திற்கு சென்றவர்கள் எங்களிடம் சொல்லி செல்லவில்லை என தெரிவித்தார். ஊழல் மன்னன் ஸ்டாலின் எனக்கூறிய அவர், ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு என கேள்வி எழுப்பினார். ஸ்டாலினே ரவுடித்தனம் செய்பவர் எனவும், இது போன்ற தாக்குதல் தொடர்ந்தால் தக்க பாடம் புகட்டுவோம் எனவும் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.