July 30, 2018
தண்டோரா குழு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து, முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் நலம் விசாரித்தனர்.
திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனை வெளியே ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக காவிரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நேற்று முதலே ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளதால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
இந்நிலையில், கருணாநிதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார், விஜயபாஸ்கர், சி.வி. சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,
கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது. சிகிச்சை பெற்று வரும் அவரை நான், துணை முதலமைச்சர் ஓபிஎஸ், ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் நேரடியாக பார்த்தோம். அவர் நலமுடன் உள்ளார். கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மு.க ஸ்டாலின், கனிமொழியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டோம் எனத் தெரிவித்தார்.