August 8, 2018
தண்டோரா குழு
மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான கருணாநிதிக்கு கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.
கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து பத்திரிக்கையாளர்கள் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறைந்த மூத்த பத்திரிக்கையாளர் கலைஞர் கருணாநிதிக்கு தமிழ் வணக்கம்
செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில், ஒரு பத்திரிக்கையாளனாக இருந்தால் தான் சமூகத்தின் அடித்தட்டு மக்களின் துன்பங்களை உணர முடியும் என்பதை மெய்பிக்கும் வகையில் அவர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கியவர் கலைஞர். திராவிட இயக்கத்தின் மூலம் சுயமரியாதையை தமிழர்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் போராடிய போராளி. குடியரசில் தொடங்கி முரசொலி வரை ஏறத்தாழ தனது 14 வயதில் இருந்து பத்திரிக்கையாளனாக சமூகத்திற்கு தனது கடமையை தொடங்கியவர் இறுதிவரை மக்களின் உரிமைக்காக போராடியவர். ஒரு பத்திரிக்கையாளன் வெற்றி மற்றும் தோல்வியை எப்படி சமாளித்து போராட வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்தவர். அவரது கொள்கைகளையும், தமிழ்ப்பற்றையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதே இன்றைய பத்திரிக்கையாளருக்கு விட்டுச்சென்ற சொத்துக்கள் எனவும் திருநங்கை, திருநம்பி என அழைக்க கற்றுக்கொடுத்து அவர்களையும் இந்த சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ வழி வகுத்தவர் கலைஞர். மேலும் 108 அவசர ஊர்தி திட்டத்தை தமிழகத்தில் அமுல்படுத்தி லட்சக்கணக்கான உயிர்களை காக்கவும், மென்பொருள் துறையில் பூங்காக்களை உருவாக்கி லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு கிடைக்க உதவியவர் கருணாநிதி. அவரது மறைவு தமிழக பத்திரிக்கையாளர்களுக்கு பேரிழப்பாகும் என்பதை உணர்த்து வண்ணம் கோவை மாவட்ட அனைத்து பத்திரிக்கையாளர்கள் சார்பாக தமிழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
இதில் திரளான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.