October 28, 2020
தண்டோரா குழு
திமுக கோவை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை மாநகர் மற்றும் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்து வரும் பையா என அழைக்கப்படும் கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான வீடு காளப்பட்டி பகுதியில் உள்ளது. பையா என அழைக்கப்படும் கிருஷ்ணன் காளப்பட்டி பேரூராட்சி தலைவராக சுயேச்சையாக போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி பெற்றுள்ள நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார்.
விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நிலையில் இன்று 2 மணி அளவில் இரண்டு பெண் அதிகாரிகள் உட்பட 6 வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தகவலறிந்து அவரது வீட்டின் முன்பு திரண்ட 30க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் சமாதானம் செய்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவையில் ஸ்டாலினை கிண்டல் செய்யும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டதை கண்டித்து நேற்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் தற்போது திமுக நிர்வாகி ஒருவரது வீட்டில் வருமானவரிச் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.