• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுகவின் நாடகத்திற்கு தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள் – வானதி சீனிவாசன்

August 21, 2023 தண்டோரா குழு

பாஜக.,வின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு எம்.எல்.ஏ.,வுமான வானதி சீனிவாசன் கூறியிருப்பதாவது:

மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வை மீண்டும், தங்களின் குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்த தொடங்கியிருக்கிறது திமுக.

திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. 2017 முதல் கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்தில் நீட் தேர்வு நடந்து வருகிறது. ஆண்டுக்கு தமிழக மாணவர்களின் பங்கேற்பும், தேர்ச்சியும் அதிகரித்து வருகிறது. ஆனாலும், ஹிந்தி வெறுப்பு, திராவிட இனவாதம் போல, நீட் தேர்வையும் பிரித்தாளும் அரசியல் ஆயுதமாக திமுக பயன்படுத்தி வருகிறது.

நீட் தேர்வுக்காக தமிழக அரசே பயிற்சி மையங்களை நடத்தி, அதற்கு பெரும் வெற்றி கிடைத்து வந்த நிலையில்தான், 2021-ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. 2021சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி, தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்து முதல் கையெழுத்திடுவோம். அதற்கான ரகசியம் எனக்கு தெரியும் என்றார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வை, உச்ச நீதிமன்ற உத்தரவில்லாமல் ரத்து செய்ய முடியாது என்பது தெரிந்தும் பொய்யான வாக்குறுதி அளித்து திமுக ஆட்சிக்கு வந்தது. அதுமட்டுமல்ல ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு இருக்காது என திமுகவினர் பிரசாரம் செய்கின்றனர். இதனால், நீட் தேர்வு இருக்காது, 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில்தான் எம்.பி.பி.எஸ் சேர்க்கை நடக்கும் என ஒரு பகுதி மாணவர்கள் நம்ப வைக்கப்படுகின்றனர். இன்னொரு பெரும் பகுதி மாணவர்கள் நீட் தேர்வு நடக்குமா, நடக்காதா என்ற குழப்ப மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இதனால் நீட் தேர்வை உறுதியுடன் எழுத முடியாத சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இதனால்தான் தற்கொலை செய்து கொள்ளும் சூழலுக்கு சில மாணவர்கள் தள்ளப்படுகின்றனர். நீட் தேர்வு பயிற்சி மையங்கள் மாணவர்களுக்கு சுமை என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நீட் தேர்வு நடந்தபோது, 12-ம் வகுப்பையே பயிற்சி மையங்கள் போல, ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் கட்டணம் வாங்கிக் கொண்டு தனியார் பள்ளிகள் நடத்தின. நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்ட தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கானோர் எம்பிபிஎஸ் சேர்ந்தனர்.

தனியார் பயிற்சி மைய பிரச்சினை 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்து மாணவர் சேர்க்கை நடக்கும்போதும் இருந்தது. இப்போதும் இருக்கிறது. அதன் வடிவங்கள் தான் மாறியுள்ளன. அரசு இதில் அதிக கவனம் செலுத்தும் தனியார் பயிற்சி மைய பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம். ஆனால், அரசியல் ஆதாயத்திற்காக இதற்கு தீர்வு காண்பதில் திமுக அரசு அக்கறை காட்டவில்லை.

நீட் தேர்வால் இட ஒதுக்கீடு முறையில் எந்த மாற்றமும் இல்லை. தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டின்படியே மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்கிறது. மத்திய பாஜக அரசின் வழிகாட்டுதலில், அதிமுக அரசு கொண்டு வந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு அரசுப் பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. எனவே, நீட் தேர்வால் சமூக நீதிக்கும் பாதிப்பு இல்லை.

மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு, ‘ஒரு மக்களவைத் தொகுதிக்கு ஒரு மருத்துவக் கல்லூரி’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதனால் நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும், எம்.பி.பி.எஸ், எம்.டி., போன்ற இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளின் எண்ணிக்கையும் இரு மடங்காகியுள்ளது.

திமுக தொடங்கப்பட்டபோது அதாவது அக்கட்சியின் முதல் தலைமுறை இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியது. இப்போது மூன்றாவது தலைமுறை நீட் எதிர்ப்பு போராட்டத்தை கையிலெடுத்துள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் மாணவர்களைத்தான் பழிகடா ஆக்கினர். இப்போதும் அதுதான் நடக்கிறது. ஆனால் இந்த முறை தமிழக மாணவர்களும், தமிழக மக்களும் ஏமாற மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க