June 13, 2018
தண்டோரா குழு
டிடிவி தினகரன் ஆதரவு 18எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம்தீர்ப்பு வழங்கவுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி, தினகரன் அணி என மூன்று அணிகளாக பிரிந்தது. இந்நிலையில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்கக்கோரி ஆளுநர் வித்யாசாகர் ராவிடம், டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்கள்தனித்தனியே கடிதம் அனுப்பினர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தவிர வேறு ஒருவரை முதல்வராக ஏற்கவும் தயார் எனவும் அக்கடிதத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து, ஆட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி கடந்த செப்டம்பர் 18-ம் தேதி 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சட்டப்பேரவைவில் சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார்.சபாநாயகரின் இந்த உத்தரவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ-க்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்திருந்தனர். கடந்த செப்டம்பர் மாதம் இந்த வழக்கு தனி நீதிபதி ரவி சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது செப்டம்பர் 20-ம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ-க்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த கூடாது என ஒரு இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். பின்னர், அரசியல் சாசனம் தொடர்பான வழக்கு என்பதால் இந்த வழக்கை ஒன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்தார்.
இதையடுத்து, இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து கடந்த ஜனவரி 23-ந் தேதி தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது.இந்த நிலையில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.