December 29, 2020
தண்டோரா குழு
கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கார்த்திக் எம்எல்ஏ., மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று காலை நிருபர்களிடம் கூறியதாவது:
கோவையில் திமுக சார்பில் மக்களை சந்தித்து, மக்கள் குறைகளை தெரிந்துகொண்டு, அதை தீர்க்கும் வகையில் ‘மக்கள் கிராம சபை கூட்டம்’ நடத்தி வருகிறோம். அமைதியான முறையில், அறவழியில் நடக்கும் இ்ந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்படுகிறது. ஆளும்கட்சியினர் தூண்டுதலின் பேரில், போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
அதே நேரத்தில் ஆளும்கட்சியினர் நடத்தும் எல்லா நிகழ்ச்சிக்கும் போலீசார் அனுமதி அளிக்கின்றனர்.போலீசாரின் இந்த ஒருதலைபட்சமான நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. போலீசாரின் இந்த அராஜக செயலை கண்டிக்கும் வகையில், மாவட்ட ஒருங்கிணைந்த திமுக சார்பில் இன்று மாலை 4 மணிக்கு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். அத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். போலீசார் எத்தகைய நடவடிக்கையில் இறங்கினாலும் இந்த முற்றுகை போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும். போலீசார் தொடர்ந்து அனுமதி மறுக்கும் பட்சத்தில் வார்டு வாரியாக மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் தினமும் நடத்தப்படும்.
இவ்வாறு கார்த்திக் எம்எல்ஏ கூறினார்.