• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தலைவர்களின் திட்டங்களை கொச்சைப்படுத்தினால், தொண்டர்கள் கொதித்து எழத்தான் செய்வார்கள் – முதல்வர்

November 10, 2018 தண்டோரா குழு

தலைவர்களின் திட்டங்களை கொச்சைப்படுத்தினால், தொண்டர்கள் கொதித்து எழத்தான் செய்வார்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிச்சாமி,

18 தொகுதிகளிலும் மட்டுமல்ல 234 தொகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் கட்சிக்கும் ஆட்சிக்கும் பெரும் துரோகம் இழைத்துவிட்டனர். அதிமுகவிற்கு எதிராக சதித்திட்டம் தீட்டியவர் தினகரன் தான். சமீபத்தில் ஸ்டாலின் சந்திரபாபுவை சந்தித்து பேசியுள்ளார். பாலாறு தடுப்பணை பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பும் ஸ்டாலின், சந்திரபாபு நாயுடுவை சந்திக்கும் போது இது குறித்து ஏதேனும் பேசினாரா? நாங்கள் கொள்கையுணர்வுடன் தான் யாருடனும் கூட்டணி வைப்போம். ஆனால் திமுக சந்தர்ப்பவாத கூட்டணி வைத்து கொள்ளும். பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த போது , அது மதவாதக் கட்சி என திமுகவுக்கு தெரியவில்லையா? தமிழக மக்களின் உரிமைகளை காப்பதற்காக மத்திய அரசுடன் இணக்கமாக செல்கிறோம்.

தொண்டர்களோடு சேர்ந்து பொதுமக்களும் போராடியதால் தான் சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கினார்கள். திரைப்பட இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் அவர்களின் உறவினர்கள் கூட அரசின் விலையில்லா பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். கோடி கோடியாக செலவு செய்து படம் எடுக்கிறார்கள். ரூ.300 கோடி, ரூ.500 கோடி முதலீடு செய்து திரைப்படம் எடுப்பவர்களுக்கு பணம் எங்கிருந்து வந்தது? சில நடிகர்கள் தங்களை வளமாக்கி கொள்ள திட்டமிட்டு தவறான கருத்துக்களை பரப்புகின்றனர். ஒரு படத்திற்கு ரூ.50 கோடி வாங்கும் நடிகர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள்?
ரூ.100 டிக்கெட்டை ரூ.1000க்கு விற்று ரசிகர்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள். சினிமா டிக்கெட் கட்டணம் கூடுதலாக வசூலித்தால் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சர்கார் பிரச்னை சுமுகமாக முடிந்துவிட்டது; மேலும் மேலும் பெரிதுபடுத்த வேண்டாம்.

சினிமாவில் வாய்ப்பு குறைந்து விட்டதால் மக்களை ஏமாற்ற கமல் அரசியல் நாடகமாடுகிறார். அரசியலில் கமலின் நடிப்பை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது, இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவை.பொதுமக்கள் தங்களது சுற்றுப்புற பகுதியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல் வந்த உடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றால் டெங்குவை கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க