May 28, 2018
தண்டோரா குழு
பிரதமர் நரேந்திர மோடி தமிழ் பெண் ஒருவரிடம் உங்கள் வீட்டுக்கு வந்தால் தோசை செய்து தருவீர்களா என்று கேட்டுள்ளார்.
ஏழை மக்களுக்காக இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுடன் இன்று நமோ ஆப் மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ருத்தராம்மா என்ற பெண்ணுடன் மோடி பேசினார்.
மோடி இந்தியில் பேசினார் ருத்தராம்மா தமிழிலில் பேசினார் இருவருக்கும் வசதியாக மொழிபெயர்ப்பாளர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, பிரதமர் மோடி வணக்கம் ருத்தராம்மா என்று தமிழில் பேசினார். பின்னர் இந்தியில் பேசிய அவர் உங்கள் வீட்டில் எரிவாயு இணைப்பு எப்படி உள்ளது என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ருத்தராம்மா நன்றாக உள்ளது என்றும் முன்பெல்லாம் விறகு அடுப்பில் கரும்புகையில் கிடந்து அல்லல் பட்டதாகவும் தற்போது அந்த சிரமம் இல்லை என்றும் கூறினார்.
இதனைத்தொடர்ந்து ருத்தராம்மாவிடம் பேசிய மோடி உங்கள் வீட்டுக்கு வந்தால் தோசை செய்து தருவீர்களா என்று கேட்டார். அதற்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த ருத்ராமா கண்டிப்பாக தோசை செய்து தருவேன் என்று கூறினார்.
இதைக்கேட்ட மோடி, தனது தாயும் முன்பு காலத்தில் விறகு அடுப்பில் புகைமூட்டத்தில் கஷ்டப்பட்டதை நினைவு கூர்ந்தார்.